Sunday, November 29, 2009

ஆங்கிலம் - இரண்டாம் ஆண்டு நிறைவு

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!

இன்று கார்த்திகை 29 ஆம் நாள். இன்றுடன் எமது வலைத்தளம் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்து தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்நாளில் எமது இத்தளத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி வரும் உறவுகள், வருகையாளர்கள், ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள் அனைவருக்கும் நாம் எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது தளத்திற்கு இணைப்பு வழங்கி எம் தளத்தை மெம்மேலும் பலரது பார்வைக்கு கொண்டு செல்ல உதவிய திரட்டிகள், சக வலைத்தளப்பதிவர்கள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றிற்கும் எமது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிறைவுற்ற இவ்வாண்டில் எம்மால் அதிகமானப் பாடங்களை வழங்கமுடியாமல் போயிற்று அதற்காக வருந்துக்கின்றோம். ஒன்று, இரண்டு பதிவுகளாகவே ஆண்டு நிறைவுற்றும் போயிற்று. ஆகஸ்ட் மாதம் மட்டுமே ஆகக்கூடியப் பதிவுகளாக 4 பதிவுகள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு இத்தளத்தின் மெதுவோட்டம் இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்கின்றது. இருப்பினும் இத்தளம் பலரையும் ஈர்த்து பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டி வருகின்றது. கடந்த ஆண்டு நிறைவுறும் பொழுது ஒரு நாளுக்கு சராசரியாக 500 பக்கப்பார்வைகள் மட்டும் எமது தளத்திற்கு கிடைத்தன. ஒரு சில நாட்களில் மட்டும் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது, அப்பொழுது அது ஆச்சரியத்தைத் தந்தது. ஆனால் தற்போது ஆயிரத்தை அன்மிக்காத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. மாத எண்ணிக்கையாக கடந்த ஆண்டு ஆக கூடுதலாக 20,780 வருகைகள் என வருகைக்கணிப்பான் காண்பித்தான். இவ்வெண்ணிக்கை படிப்படியாக வளர்முகம் காட்டி இம்மாதப் பக்கப்பார்வைகளின் எண்ணிக்கை 50,000 ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்துச்செல்கின்றது. மொத்தப் பக்கப்பார்வைகள் அரை மில்லியனை கடந்துச்செல்கின்றது. இவைகளே எம் தளத்திற்கு கிடைக்கும் சான்றாக நாம் கொள்கின்றோம். இது இன்றைய உலகின் முன்னோக்குகளுக்கு ஆங்கில மொழியின் அத்தியாவசியத்தையும், அதனை கற்க முனைவோரின் முனைப்பையும் காட்டுகின்றது.

வருகைத்தருவோர் அதிகமானோர் தமிழகத்தில் இருந்தே வருகின்றனர். கடந்த ஆண்டில் 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வருகைத்தந்திருந்தனர். இலங்கையில் இருந்து வருகைத்தந்திருந்தவர்கள் சராசரியாக 7% வீதமாக மட்டுமே இருந்தது. இவ்வாண்டு அது 30% வீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகைத்தரும் தமிழ் உறவுகளுக்கு என்னால் இயன்ற இச்சிறுப்பணியை செய்ய பேருதவியாய் இருந்த கூகிள் நிறுவனத்தின் “ப்ளொக்” சேவைக்கு நன்றியும் கடமையும் உள்ளவனாகின்றேன்.

அதேவேளை எமது தளத்தின் பெயரான aangilam.blogspot.com என்பதைத் தவிர;

ஆங்கில
ஆங்கிலம்
aangilam
Learn English grammar through Tamil

போன்ற சொற்களில் தேடினால் கூகிள், யாஹூ, எம்.எஸ்,என் போன்ற முன்னனி தேடுப்பொறிகள் எமது தளத்தினையே முதல் தெரிவாகக் காட்டி வருகின்றன. அவற்றிற்கும் நன்றிகள். (நேரடியாக தளத்திற்கு வரிகைத்தருவோரே அதிகமானோர். கணிசமானோர் தேடுப்பொறியூடாகவே வந்தடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

வேண்டுகோள்களும் பரிந்துரைகளும்

நூல் வடிவில் ஆங்கிலப் பாடங்களை பலர் கேட்டுவருகின்றனர். அதற்கான முயற்சியில் கடந்த ஆண்டு ஈடுப்பட்டிருந்தாலும் அதனை நிறைவு செய்ய முடியாத மனநிலைக்குள்ளும் வெறுமைக்குள்ளும் தள்ளப்பட்டிருந்தமையே அதனை நிறைவுச்செய்ய முடியாமல் போனமைக்கானக் காரணம். இருப்பினும் எதிர்வரும் ஆண்டில் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். அதேவேளை எமது மொழிப்பெயர்ப்பு தொடர்பில் சில வேண்டுகோள்களும் பரிந்துரைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவைத்தொடர்பில் கவனம் எடுக்கப்படும். இருப்பினும் சில விளக்கங்கள் இங்கே...

எந்தமிழ் சிறப்பும் எம் மொழிப்பெயர்ப்பும்

உலகின் ஒவ்வொரு மொழிகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எம்தமிழ் மொழிக்கென தனிச்சிறப்புகள் பல உள்ளன.

அவற்றில் சில:

I love you mother
நான் உன்னில் அன்பாக இருக்கிறேன் அம்மா
(இவ்வாறு தமிழர்கள் கூறும் வழக்கம் இல்லை. இதனை எமது தமிழ் வழக்கிற்கு ஏற்ப “எனது அன்பு அம்மா” என்று நாம் கூறுவதற்கு இணையான சொல்லாடலாகக் கொள்ளலாம்.)

I love you my son
நான் உன்னில் பாசமாக இருக்கிறேன் எனது மகனே.
(இவ்வாறும் நாம் கூறும் வழக்கம் இல்லை. இதனை “எனது செல்ல மகனே” என்பதாகக் கொள்ளலாம்.)

I love my motherland
நான் எனது தாயகத்தை நேசிக்கிறேன்.
("நான் எனது தாய் நிலத்தின் மீது பற்று வைத்துள்ளேன்" என்பதற்கு இணையான சொல்லாடல்)

I love you
நான் உன்னை காதலிக்கிறேன்.
(இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்)

I love Indian foods.
நான் விரும்புகிறேன் இந்திய உணவுகளை.
(இங்கே விருப்பத்தை தெரிவிக்கவும் "Love" பயன்படுகின்றது.)

இவ்வாறு அன்பு, பாசம், காதல், நேசம் (பற்று), விருப்பு போன்று ஒவ்வொரு தமிழ் சொற்களும் அதனதன் வெவ்வேறு பொருளை அழகாக வெளிப்படுத்துக்கின்றது. இதுவே எந்தமிழின் சிறப்பாகும். ஆனால், ஆங்கிலத்திலோ LOVE எனும் ஒற்றைச் சொல்லே எல்லாவிடங்களிலும் பயன்படுகின்றது. இவ்வாறான தனிச்சிறப்புக்கள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன.

இவற்றை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்; ஒரு ஆங்கில ஆக்கத்தை மொழியாக்கம் செய்வதானால்; ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய தனித்துவங்களோடு மொழியாக்கம் செய்தலே சிறப்பானது. ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்க முனைவதானால்; முதலில் அக்கட்டுரையை வாசித்து, அதனை அப்படியே உள்வாங்கிகொண்டு, பின் தமிழுக்கு ஏற்ற நடையில், தமிழர் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையிலேயே எழுதவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் என்னிடமில்லை. எடுத்துக்காட்டாக: “I love you my son” என்பதற்கு “எனது செல்ல மகனே” என்பதுப்போன்று தமிழாக்கமும் செய்யலாம். ஆனால் ஆங்கிலம் கற்பிக்கும் பொழுது அவ்வாறு கற்பித்தல் முறையற்றது.

I love you my son
“நான் உன்னில் அன்பாக இருக்கிறேன் எனது மகனே” எனும் வாக்கியத்தில் ஒவ்வொரு ஆங்கில சொல்லும் எவ்வாறு தமிழுக்கு பொருள் தருகின்றது என்பதை முதலில் கற்றுத்தெளிந்தால், அதன்பின் தமிழ்நடைக்கு ஏற்ப எம்மால் எளிதாக விளங்கிக்கொள்ளலாம். இதனை தான் நாம் பொருளுணர்ந்து கற்றலே முதலில் அவசியம் என்கின்றோம்.

பொருளுணர்ந்து கற்றலின் அவசியம்

பொருளுணர்த்தி கற்கப்படாவிடின் அது என்ன விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதை விளக்கும் வகையில் அன்மையில் ஒரு புத்தகத்தில் பார்த்த ஒரு சொல்லை மட்டும் எடுத்துக்காட்டுக்காக முன்வைக்கின்றேன். (இங்கே குறிப்பிட்டு எந்த ஒரு புத்தகத்தையோ, கற்கை நெறியையோ விமர்சிக்கும் வகையில் எழுதுவதாக நினைத்துவிடாதீர்கள். பொருளுணர்ந்து கற்காவிட்டாலோ, தவறான பொருள் தரும் வகையில் கற்றாலோ, ஏற்படும் விளைவுகளை விவரிக்கவே இவைக் குறிப்பிடப்படுகின்றன என்பதை விளங்கிக்கொள்ளவும்)

"Can I help you?" என்பதற்கு
"உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இதை நான் பிழையென்று கூறவில்லை. எனிலும், சரியான பொருளுணர்ந்து கற்பதற்கு இவ்வாறான தமிழாக்கம் தடையாகின்றது. ஒரு ஆரம்ப ஆங்கிலம் கற்கும் ஆர்வலர் சரியானப் பொருள் அறிந்துக்கொள்ள முடியாதச் சிக்கலும் தோன்றுகிறது அல்லவா?

Can I help you?
"நான் உனக்கு உதவ முடியுமா? என உதவிச்செய்வதற்கும் அனுமதி கோரும் வகையில் இக்கேள்வி தொடுக்கப்படுகின்றது." என்பதை முறையாகக் கற்பிக்கலாமே. இதனை Polite and More Polite பாடத்தில் பார்க்கலாம். ("உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" எனும் தமிழ் வாக்கியத்திற்கு இணையாக "Do you want any help?" எனும் ஆங்கில வாக்கியமே பொருத்தமானது.)

இதனால் தான் நாம் ஆங்கில வழிக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பிக்கின்றோம்.

தமிழ் - தமிழர் - ஒரு சம்பவம்

அன்மையில் ஹொங்கொங்கில் ஒரு கிருஸ்தவ தமிழ் பாதிரியாரைச் சந்திக்கக் கிடைத்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்தார். அவருடன் பேசும் பொழுது நான் தமிழிலேயே பேசினேன். அவர் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாடினார். நான் ஒரு கட்டத்தில் "உங்களுக்கு தமிழ் தெரியாதா?" என்றேன், அவர் அதற்கு "தெரியும் (But) பட்டு..." என்று இழுத்த இழுவையில் அதன் பின் மீண்டும் அவர் நாவிலிருந்து தமிழ் வரவில்லை.

இவ்வாறான பலரை சந்தித்துள்ளேன். இவர்கள் தமிழில் பேசுவதையே தாழ்வாக உணர்கின்றனரோ எனத் தோன்றுகின்றது! தமிழின் சிறப்பறிந்த இத்தாலியப் பாதிரியார் (Costanzo Giuseppe Beschi) தமிழுக்கு செய்த அரும்பணிகளையும் நினைத்துப்பார்க்கிறேன். அந்நிய மொழியினருக்கு தெரிந்த எந்தமிழின் சிறப்பு, ஏனோ எம்மவர்களுக்கு தெரிவதில்லை!

தமிழுக்கு இந்த நிலை என்றால், தமிழரின் நிலை?

அமெரிக்கக் குடியும் தமிழ் குடியும் (திரைப்படம்)

2003 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட Bruce Wills நடித்த ஒரு திரைப்படத்தை அன்மையில் பார்த்தேன். அத்திரைப்படத்தின் கதை அமெரிக்கப் பெண் ஒருத்தி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா சென்று போர் பகுதிக்குள் சிக்கிக்கொள்கின்றார். அங்கே ஓர் இனவழிப்பு போர் நடந்தவண்ணம் உள்ளது. அதற்குள் சிக்குண்டு இருக்கும் அமெரிக்கப் பெண்ணை மீற்பதுதான் கதை. அமெரிக்கா அதற்காக ஒரு படையணியையே களமிறக்கி மீற்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றது. இவ்வாறு அத்திரைப்படத்தின் கதை நகர்கின்றது… படத்தின் பெயர் (Tears of the Sun) அதன் தமிழ் பொருள் சூரியனின் கண்ணீர்துளிகள். அதாவது அங்கு நடக்கும் கொடுமைகள் சூரியனுக்கே கண்ணீரை சிந்தவைக்கிறது என்பது போல் பெயரிடப்பட்டிருக்கின்றது. (தமிழர் கொடுமைப்பட்டால் எந்தச் சூரியனில் இருந்தும் கண்ணீர் வராது போலும்!) இதில் சிந்தனைக்குரியது என்னவென்றால்; ஒரு அமெரிக்க நாட்டு குடியினை மீற்க ஒரு படையணியையே அனுப்புவதுப் போன்ற அத்திரைப்படத்தின் மூலக்கதை, அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனதும் உயிர் எந்தளவு மதிக்கப்படுகின்றது என்பதை வெளிகாட்டுக்கின்றது.

அதேவேளை இலங்கை குடியுரிமை பெற்று வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்றுக்குவிக்கப்பட்டும் கேட்பதற்கு ஒருவரும் இல்லையென்றாகின்றது. அட! இலங்கையில் தான் இந்த பேரவலம் என்றால், இந்தியாவின் தென்முனையில் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டாலும் அதே நிலைமைத்தான்.

"செம்மொழியான தமிழை, இந்திய அரசே உடனே அங்கீகாரம் கொடு" என தமிழ் செம்மொழி போராட்டக் குழு போராட வேண்டியிருந்தது.

"முற்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்டிருக்கும் தமிழரை விடுவி" என உலகத்தமிழினமும் பன்னாட்டு அரசுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.

உண்மையில் தமிழரான நாம் எந்த நாட்டு குடியுரிமைகள் என்பதை சற்று சிந்திக்கத்தோன்றுகிறது!? நினைத்தால் மனம் கனக்கின்றது.

சரி! இரண்டாம் ஆண்டு நிறைவு என்று என்னென்னவோ பேசியுள்ளேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்று இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் பதிவு என்றல்லாமல், ஒரு துணுக்குப் பாடத்தையும் இத்துடன் வழங்குகின்றோம்.

ஒலிப்பொழுக்கம்

தமிழ் ஒலிப்பொழுக்கம் மிக்க மொழி (Phonetic Language), ஆங்கிலம் ஒரு ஒலிப்பொழுக்கமற்ற மொழி என்பதை ஆங்கிலம் முறையாகக் கற்றோர் அறிவர். ஆங்கிலத்தில் "OUGH" எனும் எழுத்துக்களை எடுத்துக்கொண்டால்; இவ்வெழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியாக ஒலிப்பதில்லை. ஏழு வெவ்வேறு ஒலிப்புக்களை தருகின்றன. இவற்றை சரியாக விளங்கிக் கற்க வேண்டுமானால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

1. though - தோ
தமிழில் “அதோ, இதோ” என்பதில் ஒலிக்கும் “தோ” போன்று ஒலிக்க வேண்டும்.

2. through – த்ரூ
“ரூபா” என்பதில் வரும் “ரூ” போன்று ஒலிக்க வேண்டும்.

3. cough – கfப்
இதில் “fப்” என்ற மென்மையான ஒலிப்பைத் தரும். (ஆங்கிலச்சொல்லான “of, offer” என்பதற்கு இணையான ஒலிப்பு)

4. rough - றffப்
இதில் வரும் “ufப்” எனும் சத்தம் சற்று அழுத்தமாக வரும். (“Suffer” என்பதில் வரும் “uff” என்பதுப்போன்று ஒலிக்கும்)

5. plough – ப்லfவ்
(“flower” என்பதில் ஒலிக்கும் “ow” என்பதுப்போன்ற ஒலிப்பு)

6. ought - ஓட்
(இது வாயை முழுமையாகத் திறந்து “ஓ” ஒலிக்க வேண்டும்.)

7. borough - Bபொறோ
இச்சொல் ஆங்கிலத்தில் “above” என்பதுப் போன்று ஒலிக்க வேண்டும்.

ஆங்கிலம் இன்றைய உலகில் தவிர்க்க முடியாத மொழியாகியுள்ளது. அதனை முறையாக கற்பதால் நாமும் பல வளர்ச்சிப்படிகளை எட்டலாம். எனவே அவற்றை முறையாகக் கற்க வேண்டிய கட்டாயத் தேவை எல்லோருக்கும் உண்டு. அதேவேளை நாம் எம் தமிழுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் நாம் கற்கும் ஆங்கில அறிவின் பயனும் ஏதாவது ஒரு வகையில் எம் தமிழுக்கு கிட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எமது அடுத்தப்பாடத்தில் (மூன்றாம் ஆண்டில்) சந்திப்போம்.

மீண்டும் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைப்பெறுகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு நாளின் எமது தளத்தில் குறைகளையும் நிறைகளையும் உங்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்ப்பார்க்கின்றோம்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun

Wednesday, November 18, 2009

ஆங்கில பாடப் பயிற்சி 29 (Past Perfect Progressive)

நாம் Grammar Patterns 01 இல், இதுவரை ஆங்கில பாடப் பயிற்சி 28 வரை விரிவாக கற்றுள்ளோம். இன்று 29 வது ஆங்கில பாடப் பயிற்சியாகும். இன்றையப் பாடத்தில் நாம் “இறந்தக்கால வினைமுற்றுத் தொடர்” இன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் Past perfect Continuous அல்லது Past Perfect Progressive என்று அழைப்பர். இதனை தமிழிலும் “இறந்தக்கால வினை முற்றுத்தொடர்” அல்லது “கடந்தக்கால வினை முற்றுத்தொடர்” என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றது.

65. I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

வாக்கிய அமைவுகள்
_________________________________________________________
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + been + doing a job

“இறந்தக்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" இணைந்தே பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Auxiliary verb + verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + not + been + doing a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing
Had + I / He/ She/ It/ You/ We/ They + been + doing a job? இவற்றில் துணை வினைகள் பிரிந்து (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.

இன்னொரு விடயத்தையும் கவனியுங்கள். அதாவது இந்த வாக்கிய அமைப்புகள் முதலாம் நபர், இரண்டாம் நபர், மூன்றாம் நபர் எல்லாம் ஒரே வடிவிலேயே பயன்படும்.

இப்பொழுது இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக அமைப்பது என்று பார்ப்போமா? எமது பாடங்களை தொடர்ந்து பயின்று வருவோருக்கு இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றலாம் என்பது விவரிக்காமலேயே தெரிந்திருக்கும். இருப்பினும் இவற்றை கவனியுங்கள்.

கேள்வி பதில் வாக்கியங்கள்
__________________________________________________________
Had you been doing a job?
நீ அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?
Yes, I had been doing a job. (I’d been)
ஆம், நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
No, I had not been doing a job. (I’d not been, I hadn’t been)
இல்லை, நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்ததில்லை ஒரு வேலை.

வினை விளக்கம்
_________________________________________________________
மேலுள்ள வாக்கியங்களை இறந்தக்கால தொடர்வினை வாக்கியங்கள் போன்றே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் வேறுப்பாடுகள் உண்டு. என்ன வேறுப்பாடு? வாக்கியங்கள் இடையே "அன்றிலிருந்து அக்காலத்திலிருந்து” குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன?

09. I was doing a job.
“நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.” என்பதில் “இறந்தக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செயல் நடந்துக்கொண்டிருந்தது” என்பதை அவ்வாக்கிய அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன. அங்கே இறந்தக் காலத்தில் செயல் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருக்கின்றது. (எப்பொழுது முடிவடையும் என்பதைப் பற்றி அங்கே பேசப்படவில்லை.)

ஆனால் இன்றையப் பாடத்தில் “இறந்தக்கால தொடர் வினைமுற்று” வாக்கியங்களின் செயல் இறந்தக் காலத்தில் தொடங்கி - தொடர்ந்து - இன்னுமொரு இறந்தக்காலத்திற்குள்ளேயே முடிவடைந்துவிடுகிறது. (Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இவற்றை இப்படி கற்பனை செய்துக்கொள்ளுங்கள்; நீங்கள் உங்கள் நண்பரின் வருகைக்காக விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் நண்பர் வந்தடைந்தத உடன் உங்களிடம் கேட்கிறார்:

How long have you been waiting?
எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்?

I have been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இரண்டு மணித்தியாளங்களாக.

அதனையே அவர் சந்திப்பின் பின் (சில மணித்தியாளங்களின் பின் அல்லது சில காலங்களின் பின்) கேட்கிறார்:

How long had you been waiting?
எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்?

அப்பொழுது எப்படி பதிலளிப்பீர்கள்?

I had been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருந்தேன் இரண்டு மணித்தியாளங்களாக.

இப்பொழுது விளங்குகின்றதா இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடுகள்? அதாவது அவர் வருகைத்தந்த நாளன்ற அவர் வந்தடையும் இரண்டு மணித்தியாளங்களுக்கு முன்பே நீங்கள் விமான நிலையத்திற்கு சென்று காத்துக்கொண்டிருந்தீர்கள். எதுவரை காத்துக்கொண்டிருந்தீர்கள்? அவர் வந்தடையும் வரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எனவே இந்த “இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்” வாக்கியம் இறந்தக்காலத்தில் தொடங்கி (இரண்டு மணித்தியாளங்களாக தொடர்ந்து) இன்னுமொரு இறந்தக்காலத்திலேயே நிறைவும் பெற்றுவிடுகிறது.

பாடப் பயிற்சி
_________________________________________________________
மேலும் சில வாக்கியங்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை பயிற்சி செய்யுங்கள்.

1. I had been waiting there for more than 45 minutes.
நான் காத்துக்கொண்டிருந்தேன் அங்கே 45 நிமிடங்களுக்கும் அதிகமாக.

2. I had been working for over an hour.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணித்தியாளத்திற்கு மேலாக.

3. I had been standing all day in the school.
நான் நின்றுக்கொண்டிருந்தேன் முழு நாளும் பாடசாலையில்.

4. I had been teaching at that university for three years
நான் கற்பித்துக்கொண்டிருந்தேன் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக.

5. I had been doing the work.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் வேலை.

6. I had been studying English for five years
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் ஐந்து ஆண்டுகளாக.

7. I had been living there since 1997.
நான் வசித்துக்கொண்டிருந்தேன் அங்கே 1997 இல் இருந்து.

8. I had been talking with Mr. Obama for over half an hour
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக.

9. I had been driving for 10 years in Japan
நான் ஓட்டிக்கொண்டிருந்தேன் (வாகனம்) 10 ஆண்டுகள் ஜப்பானில்

10. I had been waiting in the Hong Kong airport for two hours
நான் காத்துக்கொண்டிருந்தேன் ஹொங்கொங் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக.

இவ்வாறு நீண்ட வாக்கியங்களாகவும் பயிற்சி செய்துப் பழகலாம்.

I had been waiting in the airport for more than two hours when you arrived.
நான் காத்துக்கொண்டிருந்தேன் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களுக்கும் மேலாக நீ வந்தடையும் பொழுது. (நீ வந்தடையும் பொழுது நான் இரண்டு மணித்தியாளங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்.)

I had been talking with Mr. Obama for over half an hour before you arrived.
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக நீ வருவதற்கு முன். (நீ வருவதற்கு முன்பு நான் அரை மணித்தியாளத்துக்கும் மேலாக ஒபாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.)

I had been learning English for two years before I left for America.
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் இரண்டு ஆண்டுகளாக நான் அமெரிக்காவுக்கு வெளியேறுவதற்கு முன்பு. (நான் அமெரிக்காவுக்கு வெளியேறும் முன்பு இரண்டு ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்.)

Grandma wanted to sit down because she had been standing all day in the hospital.
பாட்டிக்கு உட்கார வேண்டும் ஏனெனில் அவள் நின்றுக்கொண்டிருந்தால் முழு நாளும் மருத்துவ மனையில். (பாட்டி முழு நாளும் மருத்துவ மனையில் நின்றுக்கொண்டிருந்தால் அவளுக்கு உட்கார வேண்டும்.)

Sarmilan was tired because he had been exercising so hard.
சர்மிலன் களைப்படைந்து இருந்தான் ஏனெனில் அவன் பயிற்சிசெய்துக்கொண்டிருந்தான் மிக கடுமையாக.

Homework:
__________________________________________________________
வழமைப்போல் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களை He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி மாற்றி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு, உங்கள் நண்பர்களிடம் கேள்வி கேட்டும் பதில் அளித்தும் பயிற்சி பெறுங்கள்.

குறிச்சொற்கள் (Signal words)
__________________________________________________________
since
for
all day
the whole day


கேள்விகளின் போது:

How long

எடுத்துக்காட்டுகள்:

How long had you been doing a job in Singapore?
எவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருந்தாய் ஒரு வேலை சிங்கப்பூரில்?
I had been doing a job for 12 months.
நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை 12 மாதங்களாக. (தற்போது இல்லை)

How long had you been studying English?
நீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருந்தாய் ஆங்கிலம்?
I had been studying English since 2005. (I’d been)
நான் படித்துக் கொண்டிருந்தேன் ஆங்கிலம் 2005 இல் இருந்து. (தற்போது படிப்பதில்லை)

இவ்வாறு இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கியங்களின் கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் அடிக்கடி பயன்படும். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்றச்சொற்கள் அதிகமாக பயன்படுகின்றன.

சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)
__________________________________________________________
Positive Short forms

I had been = I'd been
You had been = You'd been
He had been = He'd been
She had been = She'd been
It had been = It'd been
We had been = We'd been
They had been = They'd been

Negative Short forms

எதிர்மறை வாக்கியங்களின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகை உள்ளன.

I had not been = I'd not been / I hadn't been
You had not been = You'd not been / You hadn't been
He had not been = He'd not been / He hadn't been
She had not been = She'd not been / She hadn't been
It had not been = It'd not been / It hadn't been
We have not been = We'd not been / We hadn't been
They have not been = They'd not been / They hadn't been

வரைப்படம் (Diagram)
__________________________________________________________
இறந்தக்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இந்த வரைப்படம் ஊடாக பார்க்கவும். (The diagram explain to you that Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இன்றையப் பாடம் தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். இருப்பினும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

Friday, October 30, 2009

ஆங்கிலம் துணுக்குகள் 09 ( Word Stress)

ஆங்கிலம் பேசும் பொழுது ஆங்கில சொற்களை சரியாகவும் திருத்தமாகவும் பேசுவதற்கு; அதன் ஏற்ற இறக்க ஒலிப்பு முறைமைகளை "சொல்லழுத்தம்" (Word Stress) கற்பது மிகவும் முக்கியமானது. ஒரு தாய்மொழி ஆங்கிலேயரின் ஆங்கில ஒலிப்பிற்கும், பிற மொழியினரின் ஆங்கில ஒலிப்பிற்கும் வேறுப்பாடுகள் இருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

நாம் ஆங்கிலேயர் மாதிரியே ஒலிக்க வேண்டும் என்று இல்லாவிட்டாலும், ஆங்கில செய்தி அறிக்கைகளை கேட்டுணரவும், ஆங்கில திரைப்படங்களை எளிதாக விளங்கிக்கொள்ளவும் இவை மிகவும் முக்கியமானது.

சிலர் ஆங்கிலேயரையும் விட தாமே சரியாக ஆங்கிலச் சொற்களை ஒலிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்வோரும் உள்ளனர். உண்மையில் இது பிழையானது. ஏனெனில் ஆங்கில மொழி பாடசாலைகளில் ஆங்கில சொற்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை syllable கள் இருக்கின்றன. அவற்றை எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாகவே கற்பிக்கப் படுகின்றன. இன்று புலம்பெயர் தேசங்களில் எமது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் ஆங்கிலத்தை ஒலிக்கும் விதத்திற்கும்; இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கிலம் கற்று பேசுவோருக்கும் இடையில் அதிக வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. அதேவேளை மிகச்சரியாக ஆங்கிலத்தை ஒலிப்போர் எம்மில் இல்லை என்றும் நான் கூறவில்லை. ஆனால் ஒரு சிலர் இருந்தாலும், அதிகமானோரின் ஒலிப்புகளில் இந்த syllable கள் சரியாக ஒலிக்கப்படுவது இல்லை என்பதே உண்மை.

ஏன் எம்மாலும் சரியாக ஆங்கிலச் சிலபல்களை முறையாக ஒலிக்க முடியாதா?

முடியும். நிச்சயமாக முடியும். அதற்கு ஆங்கில ஒலிப்பு முறைகளை உன்னிப்பாக அவதானித்து பயிற்சி செய்ய வேண்டும். இங்கே ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்கான சில விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக:

“போட்டோகிராப்” எனும் சொல்லை எடுத்துக்கொண்டால் இதில் “போ” எனும் ஒலியை அழுத்தமாகவும் “டகிராப்” என்பதை மென்மையாகவும் ஒலிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒலிக்கும் பொழுது “to” ட போன்றே ஒலிக்கும்.

PHOtograph - போfட்டகிராfப்.

இதே போன்ற இன்னொரு சொல்லைப் பாருங்கள்.

phoTOgrapher - பொfடோகிராfபர்.

இதில் “பொ” மென்மையாகவும் “TO” அழுத்தமாகவும் “கிராபர்” மென்மையாகவும் ஒலிக்கப்பட வேண்டும். (இதில் “TO” டோ வாகவே ஒலிக்கப்படுகின்றது.

இன்னுமொரு சொல்லையும் பார்ப்போம்.

photoGRAPHic - பொfடோகிராfபிக்

இதில் “கிராபி” என்பதை அழுத்தமாகவும் “பொடோ” உம் “க்” உம் மென்மையாக ஒலிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு சொற்களும் பல syllable களை கொண்டுள்ளன. இவற்றை சரியாக பயிற்சி செய்துக்கொள்ளல் சிறப்பான ஆங்கில உச்சரிப்பை பெற வழிவகுக்கும்.

இங்கே மேலும் சில சொற்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை அழுத்தமாக ஒலிக்கவும்.

TEACHer

JaPAN

CHIna

aBOVE

converSAtion

INteresting

imPOrtant

deMAND

etCETera

இவை அநேகமான ஆங்கிலம் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களாலும் முறையாக கற்பிக்கப் படுவதில்லை. ஆனால் இன்றைய கணனி உலகில் இந்த "Word Stress" முறைகளை எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலேயரின் வானொலி ஒலிப்பரப்புக்களை கேட்டல், ஆங்கில திரைப்படங்களில் பேசுபவற்றை உன்னிப்பாக கவனித்தல், ஆங்கில காணொளிகளைப் பார்த்தல், ஆங்கிலப் பாடல்களை கேட்டல் போன்றன உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

தொடர்புடைய இந்த ஆக்கங்களையும் பார்க்கலாம்.

ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி (Pronunciations)

வாக்கிய அழுத்த முறைமைகள் (Sentence Stress)

ஆங்கிலப் பாடல்கள் (Using English Songs With Lyrics)

இன்றைய இப்பாடம் ஆங்கிலம் துணுக்குகள் பகுதியிலேயே வழங்கப்பட்டுள்ளது. மேலும் துணுக்குகள் இங்கே

நன்றி

அன்புடன்
அருண் HK Arun


இந்த பாடப் பயிற்சி மேலும் பலருக்கு சென்றடைய கீழே சொடுக்கி வாக்களியுங்கள். நன்றி
பதிப்புரிமை © 2007-2009 ஆங்கிலம்.ப்ளொக்.கொம்
எமது ஆங்கிலம் வலைத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், கருத்துக்களங்கள், மன்றங்கள் போன்றவற்றில் மீள்பதிவிடுவதாயின் தயவு செய்து எமது வலைத்தளத்தின் பெயரை aangilam.blogspot.com கட்டாயம் குறிப்பிட்டே மீள்பதிவிட வேண்டும். அவ்வாறு மீள்பதிவிடுவோர் எமது மின்னஞ்சல் முகவரியூடாகவோ arunhk.info AT gmail.com அல்லது குறிப்பிட்ட பாடத்தின் பின்னூட்டமாகவோ அறியத் தர வேண்டும்.
இப்பாடங்கள் பலருக்கும் பயன்பட வேண்டும் எனும் நன்நோக்குடன் நீங்கள் மீள்பதிவிடுபவராக இருக்கலாம் அவ்வாறாயின், பாடங்களின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். தயவு செய்து முழுப் பாடங்களையும் அப்படியே வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும். நன்றி.