Saturday, November 29, 2008

ஆங்கிலம் - முதலாம் ஆண்டு நிறைவு

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!

இன்று 2008 கார்த்திகை 29 ம் நாள். இன்றுடன் எமது “ஆங்கிலம்” வலைத்தளம் தனது முதலாம் ஆண்டினை நிறைவுச் செய்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கின்றது. இவ்வேளையில் இதன் வளர்ச்சிக்கு துணைப் புரிந்த எமது சக வலைப்பதிவர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள் மற்றும் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எமது “ஆங்கிலம்” வலத்தளம் தொடர்பான குறை நிறைகளையும் உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம்.

மேலும் நாம் கடந்து வந்தப் பாதையை ஒருமுறை மீட்டு உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.

வலைத்தளம் அறிமுகப் பதிவு 2007 கார்த்திகை 29 – ம் நாள்.

முதல் ஆங்கில பாடப் பயிற்சி 1 2007 மார்கழி 24 ம் நாள்.

இதுவரை வழங்கப்பட்டப் பாடங்களின் எண்ணிக்கை 19.

ஆங்கிலம் துணுக்குகள் 6.

மற்றும் ஆங்கில மொழித் தொடர்பான ஆக்கங்கள் ஆங்கில மொழி வரலாறு, அமெரிக்க ஆங்கிலம், பழங்கள், மரக்கறிகள், அத்துடன் எமது பாடத் திட்டம் குறித்த ஒரு அறிமுக விளக்கவுரையுடன் இப்பதிவையும் சேர்த்து மொத்தம் 33 பதிவுகள் மட்டுமேயாகும்.

பதிவுகளின் எண்ணிக்கையை சக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் குறைவான பதிவுகளையே இட்டுள்ளோம்.

வருகையாளர்களின் எண்ணிக்கை

எமது முதல் ஆங்கிலப் பாடமான ஆங்கில பாடப் பயிற்சி 1 வழங்கப்பட்ட 2007 மார்கழி மாதத்தின் மொத்த வருகைகள் 212 மட்டுமேயாகும். அதன் பின் 2008 ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வருகையாளர்களின் எண்ணிக்கை 500, 1000, 10,000, 15,000 என படிப்படியாக அதிகரித்து தற்போது ஒரு நாளைக்கு 500 க்கும் அதிகமான வருகைகளாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடக் கால இடைவெளிக்குள் வருகையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துச் சென்றுக் கொண்டிருக்கின்றது. வருகையாளர் கணிப்பான் (Traffic Statistics) ஆறு இலக்கங்களில் தொடர் வளர்முகம் காட்டி வருவது மகிழ்வைத் தருகின்றது.

வழித்தடங்கள்

வருகையாளர்கள் எவ்வழியூடாக வருகின்றனர் என்று பார்ப்போமானால்

திரட்டிகளுடாக 7%.

கூகிள் யாஹூ போன்ற தேடு பொறிகளூடாக 6%.

சக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக 31%.

நேரடியாக தளத்திற்கு வருவோர் 56%.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரம் தற்போதைய கணிப்பின் படி எடுக்கப்பட்டதாகும். ஆனால், கடந்த மாதங்களின் விகிதாசாரம் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.

பொதுவாக வலைத்தளங்களிற்கான அதிக வருகைகள் திரட்டிகள் ஊடானதாகவே இருக்கும். ஆனால் எமது "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு திரட்டிகள் ஊடான வருகைகள் 7% வீதம் மட்டுமே என்பது புள்ளி விபரக் கணிப்பானின் கணிப்பாகும்.

வலையுலக வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஒரு பதிவு ஒரு சில நிமிடங்களே மட்டுமே 'தமிழ்மணம்' திரட்டியில் காணக்கூடியதாக உள்ளது. அதனால் தமிழ்மணம் திரட்டியூடாக எமது ஒவ்வொரு பதிவுக்கும் 20 – 30 வரையிலான வருகைகள் (பதிவிடும் நாட்களில் மட்டும்) கிடைக்கின்றது. நாம் இதுவரை இட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 32 எனும் கணிப்பின் படி சராசரியாக ஒரு பதிவுக்கு 30 பேர் என்றுப் பார்த்தாலும் 32 x 30 = 960 வருகைகள் அளவிலேயே உள்ளது. தமிழ்வெளி திரட்டியில் ஒரு பதிவு சில நாட்களாக காண்பிக்கப் படுவதால் அங்கிருந்தும் அதே அளவிளான வருகைகள் கிடைக்கின்றன. “திரட்டி” திரட்டியூடாகவும் குறிப்பிட்ட அளவிளான வருகைகள் கிடைக்கின்றது.

அன்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழிஷ் திரட்டியூடாக எமது தளத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

நாம் இவ்வலைத்தளத்தை ஆரம்பிக்கும் போது திரட்டிகள் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. இத்தளத்திற்கான வருகைகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்துக்கொண்டிருந்தது. அப்போது முதன்முதல் நண்பர் தேன் சிறில் அலெக்ஸ் ஓர் பதிவிட்டு எமது தளத்தை அறிமுகப்படுத்தினார். வருகைகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆழிப் புத்தகச் சாலை நண்பர் செந்தில் நாதன் அவர்கள் எமது பாடத்திட்டத்தை புத்தகமாக வெளியிடுவது பற்றி கேட்டிருந்தார். அத்துடன் இன்னும் சில நண்பர்களது ஊக்குவிப்பு மின்னஞ்சல்களும் வந்தன. இவைகளே எமது ஆரம்ப உந்து சக்திகளாகின. இவர்களுக்கு எமது அன்பான நன்றிகள்.

அதன் பின் பல வலைத்தளங்களில் எமது ஆங்கிலப் பாடம் தொடர்பான பதிவுகள் காணப்பட்டன. நண்பர் தமிழ்நெஞ்சம் இணைப்பு கொடுத்ததாலும் வருகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது நூற்றுக்கும் அதிகமான சக வலைத்தள பதிவர்கள் எமது நிரல் துண்டை தமது வலைத்தளங்களில் இணைத்து இணைப்பு கொடுத்துள்ளனர். அதில் பலர் “எளிதாக ஆங்கிலம் கற்க, இலகுவாக ஆங்கிலம் பயில” போன்ற வாசகங்களுடன் தொடுப்புக் கொடுத்திருக்கின்றனர். இவைகளே எமது பாடத் திட்டம் எளிமையாக எவரும் கற்கக்கூடியதாக இருக்கின்றது என்பதை எமக்கு உணர்த்தி மன நிறைவைத் தருகின்றது.

2008 யூன் 5 நண்பர் பிகேபி தனது தளத்தில் எமது தளத்தை அறிமுகப்படுத்திய நாள் முதன்முறையாக வருகையாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதன்பின் ஆயிரத்தைக் கடந்த நாட்கள் பல உள்ளன.

அன்மையில் தமிழ் இணைய உலகில் முதன்மை இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்நேசன் எமது தளத்தை அறிமுகப்படுத்திய நாளன்றும் வருகையாளர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது.

தற்போது அதிகமான வருகையாளர்களை ஈர்த்துத் தரும் தளங்கள் என்று பார்த்தால் தமிழ்நேசன், விக்கிப்பீடியா, பிகேபி, ததமிழ்நெட், பிகேபி விக்கி மன்றம், தமிழோவியா, அதிரை எக்ஸ்பிரஸ், முத்தமிழ் மன்றம்,போன்றத் தளங்களை குறிப்பிடலாம்.

இவற்றைத் தவிர நூற்றுக் கணக்கானோர் தமது தளங்களூடாக தொடுப்பு கொடுத்திருப்பதனால் அவற்றின் ஊடாகவும் வருகையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் "ஆங்கிலம்" என்றோ "ஆங்கில" என்றோ தேடினால் இரண்டாம் மூன்றாம் பக்கங்களில் காண்பித்து வந்த கூகிள், யாஹூ போன்ற தேடு பொறிகள் தற்போது முதல் தெரிவாக எமது தளத்தையே காண்பிக்கின்றது.

கூகிள் ரீடரூடாக எத்தனைப் பேர் எமது பாடப் பயிற்சிகளைப் பெறுகின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் மின்னஞ்சல் ஊடாகப் பாடங்களைப் பெறுவோர் எண்ணிக்கை 1000 யிரத்தை அண்மித்துள்ளது.

மாதம் இரண்டு மூன்று பதிவுகளை மட்டுமே நாம் இட்டு வந்துள்ளப் போதும் இணைய தரப்படுத்தல் புகழ் பெற்ற அலெக்ஸா தொடர்ந்து வளர்முகம் காண்பித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டங்கள்

பின்னூட்டங்கள் என்று பார்த்தால் எமது தளத்திற்கு பின்னூட்டம் வருவது என்னவோ மிகவும் குறைவுதான்.

நாம் ஒரு மாமரத்தின் மாம்பழத்தை வீழ்த்த ஒரு கல்லை எறிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது எமது குறி தப்பாது பழம் வீழ்த்தப் படுகின்றதென்றால் அல்லது நாம் எறியும் வீச்சுக்கு ஏற்ப கல் தொலைவிற்கு வீசுப் படுகின்றதென்றாலும் கூட ஒருவித நிறைவு எமக்கு ஏற்படும். அதேவேளை நாம் எறியும் அக் கல் நமது வீச்சு வேகத்திற்கு மாறாக வேகம் குன்றினாலோ, இடறி தவறி கீழே வீழ்ந்தாலோ ஏதோ ஒரு வித விருப்புக்கு மாறான உணர்வு ஏற்படுவது இயல்பானது அல்லவா!

அதேப் போன்றதே ஓர் படைப்பாளியின் படைப்புகள் மக்களை ஈர்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியும், மனச்சோர்வும் ஆகிறது.

அவ்வாறு பின்னூட்டம் வருகின்றதில்லையே என நானும் சோர்ந்துப் போன நிமிடங்கள் உண்டு.

எமது பாடத்திட்டம் ஏற்புடையதாய் இல்லையா? அல்லது இவ்வாரான ஓர் இணைய ஆங்கில பாடத் திட்டம் அவசியமற்றதா? சில சாதாரணப் பதிவுகளுக்கே நூற்றுக் கணக்கான பின்னூட்டங்கள் வருகின்றனவே என்றெல்லாம் விழித்தேன்.

காரணம் தெரியாமல் விழித்தப் போது ஓர் வலையுலக நண்பரது மின்னஞ்சல் இவ்வாறு விளக்கம் தந்தது. மின்னஞ்சலாளரின் முழுப்பெயரை தவிர்த்து இங்கே பொருத்தம் கருதி பதிவிடுகின்றேன். அனுப்பியவர் குறையாக நினைக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.

அன்பின் அருண்..,

வணக்கம்.

தங்களின் வலைப்பதிவு http://aangilam.blogspot.com/ இன்று தான் பார்க்க நேர்ந்தது. உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததேன். எனக்கு ஆங்கில அறிவு என்பது குறைவு(இல்லை என்பது தான் உண்மை). தங்களின் இப்பதிவு மூலம் நிச்சயம் என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்று திடமான நம்பிக்கை எழுந்துள்ளது.

எளிமையாகவும், இலகுவாகவும் பாடங்களைச்சொல்லிப் போகும் தங்களின் எழுத்து நடையும் நன்றாக உள்ளது.

இம்முயற்சியை கை விட்டு விட வேண்டாம். பின்னூட்டங்கள் வருகிறதோ இல்லையோ... தொடர்ந்து எழுதுங்கள். காற்றின் பக்கங்களில் அவை அழிந்துவிடாமல் அப்பேடியே காலத்துக்கும் இருக்கும். தாமதமாக வந்து சேர்ந்திருக்கும் என்னைப் போல... இன்னும் பலரும் கூட வந்து படிக்கும் வாய்ப்பு இருப்பதால்... தொடர்ந்து எழுதுங்கள்.

ஒரு மொழியில் போதிய பயிற்சி இல்லை என்பதனை எல்லோரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுவதில்லை. எனவே பின்னூட்டங்கள் வருவது இருக்காது. ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள். தங்களின் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்பாடம் நடத்தும் உங்களுக்கு நன்றிகள்.

தோழன் பாலா


பின்னூட்டங்கள் தொடர்பாக இன்னுமொரு நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அருண் அவர்களுக்கு,

தங்களுடைய ஆயிரக்கணக்கான வசகர்களில் நானும் ஒருவன்.
உங்களுடைய எல்லா பாடங்களையும் கவனித்து வருகிறேன். நான் ஆங்கிலம் கற்றவன் தான் ஆயினும், தங்களின் பாடங்களின் துணையால் பல சிறிய குறைகளை சரி செய்து கொள்ள முடிகிறது...

தாங்கள் செய்து வரும் பணி மகத்தானது. பின்னூட்டங்களை வைத்து ஒரு போதும் வாசகர்களை முடிவு செய்யாதீர்கள். தாங்கள் கணித்ததற்கு மாறாக இன்னும் பலர் தங்கள் பாடங்களை பயின்று கொண்டிருக்க கூடும்.

தங்கள் பொன்னான நேரத்தை உபயோகித்து தாங்கள் செய்யும் இந்த கல்விப்பணி மேலும் சிறக்க, வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

இ. பி.


அதன் பின்பு பெரிதாக பின்னூட்டங்களை எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆனாலும் சிலர் திறந்த மனதுடன் பின்னூட்டம் இட்டுச் செல்லும் போது (குறை நிறை எதுவானாலும்) மனதுக்கு ஒரு வித நிறைவு கிடைக்கின்றது. எம்மை செம்மைப் படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாகின்றது.

நண்பர் பிகேபி தனது வலைப்பதிவில் இப்படி எழுதியிருந்தார். “வளர்ச்சியை பின்னூட்டங்கள் கொண்டு அளந்தால் சோர்ந்துதான் போவோம். ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.”

ஆம்! ஒருமுறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுவே எமது வளர்ச்சியாகக் கொள்ளலாம். தற்போது நேரடியாக இத் தளத்திற்கு வருவோரின் எண்ணிக்கை இதனை உறுதி செய்கின்றது.

கடந்த ஆண்டில் 33 பதிவுகளை மட்டுமே இட்டுள்ளப் போதும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வருகையாளர்களை எமது “ஆங்கிலம்” தளம் ஈர்த்துள்ளதென்றால் ஒரு வலைப்பதிவாக நோக்கும் சமயம் இதனை வளர்ச்சியாக கருதலாம். ஆனால் எமது எதிர்ப்பார்ப்பு ஆங்கிலம் அத்தியாவசியமாகி விட்ட இக்கால சூழமைவில் இதனை கற்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஏழை தமிழ் மாணவர்களுக்கு எமது பாடங்கள் எளிதாக சென்றடைய வேண்டும் என்பதாகும்.

மேலும் உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது தளத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஆங்கில பாடப் பயிற்சிகளை முடிந்தவரையில் எளிதாக தர முயற்சிக்கின்றோம். மேலும் ஆங்கிலச் சொற்களஞ்சியங்கள், ஆங்கில மொழி கற்கைகள் தொடர்பான விளக்கங்கள் போன்றவற்றையும் எதிர்வரும் நாட்களில் வழங்குவதாக உள்ளோம். எமது பாடத் திட்டம் தொடர்பான குறை நிறை எதுவானாலும் தயங்காமல் எமக்கு அறியத்தருவீர்கள் என்றும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம்.

எமது ஆங்கில பாடப் பயிற்சிகளை புத்தகமாகவும் கோப்பாகவும் கேட்டு வரும் அன்பர்களுக்கு, இதுவரை நாம் எமது பாடங்களை புத்தகமாக எழுதவோ, வெளியிடவோ இல்லை. ஆனால் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் முயற்சிகள் எடுப்பதாக உள்ளோம். அவ்வாறு புத்தகமாக வெளியிடுவதாயின் வெறுமனே வர்த்தக நோக்கத்தை மையப்படுத்தியதாக எமது பாடத் திட்டம் அமையாமல், எவரும் எளிதாக கற்கக் கூடிய வகையில் மேலும் சிறப்புடன் வழங்கப்படும். அத்துடன் ஆங்கிலம் - தமிழ் ஒலிப்பதிவு கோப்புகள் அல்லது குருந்தட்டுகள் இணைத்து வழங்குவதாகவும் எண்ணியுள்ளோம். ஆங்கில உச்சரிப்புக்களைப் பொருத்தமட்டில் ஆங்கிலேயரின் உச்சரிப்பே சிறந்தது என நாம் கருதுவதால், பிரித்தானிய ஆங்கில நண்பர்களின் உதவியுடன் அதனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும், காலமும் கைக்கொடுக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.

முதலாம் ஆண்டை நிறைவுச் செய்யும் இன்னாளில் இத்தளத்தின் வளர்ச்சிக்கு பலவழிகளிலும் பங்களிப்புச் செய்து வரும் சக வலைப்பதிவர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், மன்றங்கள், குழுமங்கள் மற்றும் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்கள், மாணவர்கள், உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது அன்பையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ந்து ஆங்கில பாடப் பயிற்சிகளில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண்

Monday, November 24, 2008

ஆங்கில பாடப் பயிற்சி 19 (will be able to)

Grammar Patterns -1 றில் 23 மற்றும் 24 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். அவ்விரண்டு வாக்கியங்களையே இன்று விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து இலக்க வரிசையில் தொடரும் படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியைத் தொடர எளிதாக இருக்கும்.

ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்தும் நிகழ்கால வாக்கிய அமைப்புக்களை (can, am/is/are able to +) ஆங்கில பாடப் பயிற்சி 16 இல் கற்றோம். அவற்றின் இறந்தக்காலப் பயன்பாடுகளாக (could, was/were able to +) ஆங்கில பாடப் பயிற்சி 17 இல் கற்றோம். இன்று இவற்றின் எதிர்காலப் பயன்பாடுகளை பார்ப்போம்.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். அதாவது ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்துவதற்கான சாதாரண எதிர்கால (Simple Future Tense)வாக்கியங்கள். இந்த வாக்கிய அமைப்புகளில் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will be able to" மட்டுமே பயன்படுகின்றது. கீழே கவனியுங்கள்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + will be + able + to do a job.

Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + won’t be + able + to do a job

Question (Interrogative)
Be + subject + be able + infinitive
Will
+ I /you /he /she /it /you /we /they + be able + to do a job?

+ be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான விணைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)

சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.

Will you be able to do a job?
உனக்கு செய்ய முடியுமாக இருக்குமா ஒரு வேலை?
Yes, I will be able to do a job.
ஆம், எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
No, I won’t be able to do a job. (will + not)
இல்லை, எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

Will you be able to speak perfect English very soon?
உனக்கு பேசமுடியுமாக இருக்குமா முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்?
Yes, I will be able to speak perfect English very soon.
ஆம், எனக்கு பேசமுடியுமாக இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.
No, I won’t be able to speak perfect English very soon.
இல்லை, எனக்கு பேசமுடியாமலிருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.

Will you be able to go to university next year?
உனக்கு போகமுடியுமாக இருக்குமா பல்கலைக் கழகத்திற்கு அடுத்த வருடம்?
Yes, I will be able to go to university next year.
ஆம், எனக்கு போகமுடியுமாக இருக்கும் பல்கலைக் கழகத்திற்கு அடுத்த வருடம்.
No, I won’t be able to go to university next year. (will + not)
இல்லை, எனக்கு போகமுடியாமலிருக்கும் பலகலைக்கழகத்திற்கு அடுத்த வருடம்.

மேலும் 25 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

aangilam.com 19.mp...

1. I will be able to study.
எனக்கு கற்க முடியுமாக இருக்கும்.

2. I will be able to study both arts and sciences.
எனக்கு இரண்டையும் கற்க முடியுமாக இருக்கும் கலையையும் விஞ்ஞானத்தையும்.

3. I will be able to dance.
எனக்கு நடனமாட முடியுமாக இருக்கும்.

4. I will be able to vote.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும்.

5. I will be able to go to China.
எனக்கு போகமுடியுமாக இருக்கும் சீனாவிற்கு.

6. I will be able to improve my English knowledge.
எனக்கு வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும் ஆங்கில அறிவை.

7. I will be able to speak in English.
எனக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

8. I will be able to become a chief executive.
எனக்கு ஆகமுடியுமாக இருக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரியாக.

9. I will be able to pass the exam.
எனக்கு தேர்வடைய முடியுமாக இருக்கும் பரீட்சையில்.

10. I will be able to fly to Canada
எனக்கு பறக்க முடியுமாக இருக்கும் கனடாவிற்கு.

11. I will be able to vote via internet.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும் இணையத்தின் ஊடாக.

12. I will be able to solve problems
எனக்கு தீர்க்க முடியுமாக இருக்கும் பிரச்சினைகளை.

13. I will be able to become an IPS officer.
எனக்கு ஆகமுடியுமாக இருக்கும் ஓர் IPS பணியாளராக.

14. I will be able to receive voice-mail.
எனக்கு பெறமுடியுமாக இருக்கும் குரலஞ்சல்.

15. I will be able to come to New York.
எனக்கு வரமுடியுமாக இருக்கும் நியூ யோர்கிற்கு.

16. I will be able to get my land.
எனக்கு பெற முடியுமாக இருக்கும் எனது நிலத்தை.

17. I will be able to become famous in the world.
எனக்கு பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும் உலகில்.

18. I will be able to buy a submarine.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஓர் நீர்மூழ்கிக்கப்பல்.

19. I will be able to do my duty accurately.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் எனது கடமையை மிகச்சரியாக.

20. I will be able to marry next year.
எனக்கு திருமணம் செய்யமுடியுமாக இருக்கும் அடுத்த வருடம்.

21. I will be able to swim in the sea.
நான் நீந்த முடியுமாக இருக்கும் கடலில்.

22. I will be able to solve problems.
எனக்கு தீர்க்க முடியுமாக இருக்கும் பிரச்சினைகளை.

23. I will be able to submit to the court.
எனக்கு ஒப்படைக்க முடியுமாக இருக்கும் நீதிமன்றில்.

24. I will be able to demonstrate that.
எனக்கு மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும் அதை.

25. I will be able to win the world
எனக்கு வெல்ல முடியுமாக இருக்கும் உலகை.

Homework:

A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (will be able to) ஆற்றல் மற்றும் சாத்தியத்தை வெளிப்படுத்தும் எதிர்கால வாக்கியங்களை உதாரணமாக எடுத்து உங்கள் எதிர்கால வாழ்க்கையில் உங்களால் என்னென்ன செய்ய முடியுமாக இருக்கும், என்னென்ன செய்ய முடியாமலிருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களோ அவற்றை இரண்டுப் பட்டியல்களாக எழுதுங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் அதிவேகமாக வளர்த்துக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் எளிதாக பெற்றுவிடலாம்.

D. உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.

குறிப்பு:

ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியமானது. எனவே இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

இப்பாடத்தின் I will be able to என்பதன் சுருக்கப்பயன்பாடு I’ll be able to ஆகும்.

இதன் எதிர்மறை வாக்கிய அமைப்புகளில் (won’t be able to) என்பதில் காணப்படும் “won’t” என்பது will + not இன் சுருக்கப்பயன்பாடாகும்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

Tuesday, November 18, 2008

ஆங்கில பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)

மக்கள், இடங்கள், பொருற்கள் போன்ற பெயர்கள் "பொதுவானப் பெயர்சொற்கள்" ஆகும். தனிப்பட்ட ஒரு நபரையோ, குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, பொருளையோ இந்த பொதுவானப் பெயர்சொற்கள் குறிப்பதில்லை.

முக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவும் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.

அநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.

Common Nouns
No:Common Nounsதமிழ்
1actorநடிகர்
2actresssuhashuhasi நடிகை
3studentமாணவன்
4riverஆறு
5holiday விடுமுறை
6religionமதம்
7monthமாதம்
8dayநாள்
9boyபையன்
10girlசிறுமி
11schoolபாடசாலை
12carமகிழூந்து
13storeபண்டகச்சாலை
14shop அங்காடி
15languageமொழி
16dogநாய்
17cityநகரம்
18manமனிதன்
19coffeeshopகோப்பிக்கடை
20waiterசிப்பந்தி
21jeansகாற்சட்டை
22mobile அழைப்பேசி
23bookபொத்தகம்
24buildingகட்டிடம்
25countryநாடு

Proper Nouns

குறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே "உரித்தானப் பெயர்சொற்கள்" என்று அழைக்கப்படுகின்றது.

இப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.
No:Proper Nounsதமிழ்
1Kamalahasanகமலஹாசன்
2Suhashiniசுஹாசினி
3Sarmilanசர்மிலன்
4Mississippi riverமிஸ்ஸிசிப்பி ஆறு
54th of Julyயூலை நான்காம் திகதி
6Hinduஇந்து
7Novemberகார்த்திகை
8Mondayதிங்கள்
9Sarmilanசர்மிலன்
10Tamilovia தமிழோவியா
11Kilinochchi central collegeகிளிநொச்சி மத்திய கல்லூரி
12BMWபி.எம்.டப்ளிவ்
13Pandian storeபாண்டியன் பண்டகச்சாலை
14Wal-Mart வோல்-மார்ட்
15Tamilதமிழ்
16Puppy பப்பி
17Chennaiசென்னை
18Uruththiranஉருத்திரன்
19Starbuksஸ்டார்பக்ஸ்
20Peterபீட்டர்
21Levi'sலெவீஸ்
22Nokiaநொக்கியா
23Thirukkuralதிருக்குறள்
24IFC Towerஐஎவ்சி கட்டிடம்
25Hong Kong ஹொங்கொங்

Common Nouns and Proper Nouns

இப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

மனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.

உதாரணம்:

"நடிகர்" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் "கமலஹாசன்" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.

No:Common NounsProper Nouns
1actorKamalahasan
2actresssshuhashishiSuhashini
3studentSarmilan
4riverMississippi river
5holiday4th of July
6religion Hindu
7monthNovember
8dayMonday
9boySarmilan
10girlTamilovia
11schoolKilinochchi central college
12carBMW
13storePandian stores
14shop Wal-Mart
15languageTamil
16dog Puppy
17cityChennai
18man Uruththiran
19coffeeshopStarbuks
20waiterPeter
21jeansLevi's
22mobileNokia
23bookThirukkural
24buildingIFC Tower
25countryHong Kong

மற்ற பெயர்சொற்களின் அட்டவணைகளையும் விரைவில் தருகின்றோம்.

ஆங்கிலப் பெயர்சொற்களின் பிரிவுகள் (Nouns) இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.

நன்றி

அன்புடன் அருண்

ஆங்கிலம் துணுக்குகள் 11 (Sentence Stress)

ஆங்கிலம் துணுக்குகள் 10 இல் சொல்லழுத்தம் (Word Stress) பற்றிய விளக்கம் பார்த்தோம். அதே போன்றே வாக்கிய அழுத்தப் (Sentence Stress) பயன்பாடுகளையும் சரியாகப் பயின்று பேசுவது மிக முக்கியமானது. இவ் வாக்கிய அழுத்தப் பயன்பாட்டை முறையாகப் பயிற்சி பெறாமல் ஆங்கில மொழியை சரியாக பேசுதலே சாத்தியமற்றது எனலாம்.

இவற்றை பயில்வது கடினமானதா? இல்லை. எதனையும் சரியாக விளங்கிக்கொண்டால் இலகுவாகவே இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்களைப் பாருங்கள்.

What is your name?
வட் இஸ் யுவர் நேம்?

என்று சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசி பழக வேண்டாம். மேலுள்ள வாக்கியத்தில் உள்ள அனைத்து சொற்களையும் ஒரே சொல்லாக “வட்ஸ்யுவர்நேம்?” என பேசிப் பாருங்கள். பேசுவதற்கு இலகுவாகவும் இருக்கும். விரைவில் ஆங்கில பேச்சும் எமது நாவிற்கு எளிதாகவும் புலப்படும்.

அதேவேளை ஒலிப்பில் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடங்களை அறிந்து அதற்கேற்ப ஏற்ற இறக்கத்துடன்; அழுத்தமாக ஒலிக்க வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும், மென்மையாக ஒலிக்கப்பட வேண்டிய இடத்தில் மென்மையாகவும் பேசிப் பழகுவது மிகவும் முக்கியமானது. தாய் மொழி ஆங்கிலேயரின் உச்சரிப்பின் பொழுது இடையிடையான சில சொற்கள் உச்சரிக்கப்படாதது போல் (மென்மையாக) பேசப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அழுத்தம் குறைவுடன் ஒலிக்கப்படும் சொற்களே அவை.

WHAT is YOUr NAME?
வட்ஸ் யுவர் நேம்?

WHERE are you STAYing?
வெயாராயூ ஸ்டேயிங்?

HOW LONG have you been STAYing in HONG KONG?
ஹவ்லோங் ஹேவ்யூபீன் ஸ்டேயிங்ன் ஹொங்கொங்?

வாக்கிய அழுத்த அடிப்படை விதிமுறைகள்

முக்கியாமாக ஒரு வாக்கியத்தில் இரண்டு வகையாக சொற்கள் ஒலிக்கப்படுகின்றன.

Content Words - (கனமாக) சொல்லழுத்தச் சொற்கள்
Structure Words - சொல்லழுத்தமற்ற சொற்கள் (இவைகளே ஒரு வாக்கியத்தின் அமைப்பை முழுமைப்படுத்துக்கின்றன.)

ஒரு வாக்கியத்தில் சொல்லழுத்தச் சொற்களே (Content Words) பிரதான இடத்தை வகிக்கின்றன. அவைகளே ஒருவர் சொல்வது என்ன எனும் பொருளை விளக்குபவை.

எடுத்துக்காட்டாக:

I + GO + SCHOOL + BUS என்று நீங்கள் ஒருவரிடம் கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்பொழுது உங்கள் பேச்சை கேட்பவர் உங்கள் முகக் குறிப்புகளையும், உங்கள் அங்க அசைவுகளை (செய்கைகளை) வைத்தும் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்பதை புரிந்துக்கொள்வார்.

I am GOing to SCHOOL by BUS.
“ஐ’ம் கோயிங்டு-ஸ்கூல் bபைபஸ்” என்று கூறுவீர்களானால் வாக்கிய அமைப்பு முழுமையானதாக இருக்கும். அதேவேளை இடையில் பயன்படும் சொற்களே அழுத்தமற்று பேசப்பட வேண்டியவை என்பதையும் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இவற்றை எளிதாக எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம் என்பதை கீழே பாருங்கள்.

அழுத்தமின்றி (மென்மையாக) ஒலிக்கபட வேண்டிய சொற்கள்:

Pronouns
It, his, her, we

Prepositions
At, in, on

Articles
A, an, the

Conjunctions
But, because, and

Auxiliary verbs
Is, are, be, can

அழுத்தமாக ஒலிக்க வேண்டிய சொற்கள்:

Main Verbs
GO, COME, GIVE

Negative Auxiliary verbs
DON’T, DOESN’T, DIDN’T, CAN’T

Nouns
SARMILAN, BUS, SCHOOL, ENGLISH

Adjectives
BLUE, SMALL, CLAVER

Adverbs
USUALLY, ACTUALLY, QUICKLY,

இவற்றை முறையாக பயில்வதன் நன்மைகள்?

தாய் மொழி ஆங்கிலேயரின் விரைவான ஆங்கில ஒலிப்புக்களை எளிதாக விளங்கிக்கொள்ளல். நாமும் இந்த வாக்கிய அழுத்த முறைமைகளை சீக்கிரமே புரிந்துக்கொள்ளல். நாமும் ஆங்கிலேயருக்கு நிகரான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளல். நம்மில் பலர் ஆங்கில இலக்கணம் கற்றவர்களாக இருந்தும், பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு கூச்சப்படும் பலர் இருக்கின்றனர். அவ்வாரானவர்களும் இவ் வாக்கிய அழுத்த முறைமைகளை விளங்கிக்கொள்வதன் ஊடாக பலர் மத்தியில் தடங்களின்றியும் கூச்சமின்றியும் பேசும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ளலாம்.

எனவே ஒரு வாக்கியத்தின் "வாக்கிய அழுத்தம்" எந்தெந்த இடங்களில் பயன்பட வேண்டும் என்பதை அறிந்துக்கொள்வது சிறந்தது அல்லவா?

மேலும் துணுக்குகள்>>>

அன்புடன் அருண் HK Arun

ஆங்கிலப் பெயர்சொற்களின் பிரிவுகள் (Types of Nouns)

பொதுவாக பெயர்சொற்கள் (Nouns) என்பதற்கான வரைவிலக்கணத்தைப் பார்ப்போமானால் மனிதர்கள், உயிரினங்கள், இடங்கள், வாழ்வியல் ஆதாரங்கள், பொருற்கள், உணர்வுகள் போன்றவற்றை விவரிப்பதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் "பெயர்சொற்கள்" ஆகும்.

இப் பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக வகுத்துள்ளனர். அப்பிரிவுகளாவன:

Common Nouns - பொதுவான பெயர்சொற்கள்

man, boy, girl, shop, tree, clock, actor, mobile போன்றவை பொதுவான பெயர்சொற்கள் ஆகும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Proper Nouns - உரித்தானப் பெயர்சொற்கள்

Peter, Sarmilan, Tamilvani, Hong Kong, Vijai, Nokia போன்றவை குறிப்பிடுப் பெயர்சொற்கள் அல்லது உரித்தானப் பெயர்சொற்கள் எனப்படும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Countable Nouns - கணக்கிடுப் பெயர்சொற்கள்

car-cars, child-children, tree- two trees போன்று எண்னிக்கையை கணக்கிடக்கூடியப் சொற்களை கணக்கிடுப் பெயர்சொற்கள் என்று அழைக்கபடுகிறது.

அட்டவணைப் பார்க்கவும்.

Uncountable Nouns - கணக்கிடமுடியாப் பெயர்சொற்கள்

water, fire, air, alcohol, blood, cotton, education போன்றவை கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள் எனப்படும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Collective Nouns - கூட்டுப் பெயர்சொற்கள்

a group of things, a flock of birds, faculty, audience, team, crowd போன்ற கூட்டம் அல்லது குழுக்களின் பெயர்களை (பலதின் சேர்க்கை) பெயர்களை "கூட்டுப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

Concrete Nouns - உருவப் பெயர்சொற்கள்

Ford, dog, piano, herd, dancer, football, toy, White House, போன்ற தொடவும், பார்க்கவும் கூடியவற்றை "உருவப் பெயர்சொற்கள்" எனப்படுகின்றது. இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ உரித்தானப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடுப்பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப்பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.

Abstract Nouns - பண்புப் பெயர்சொற்கள்

intelligence, love, hate, bravery போன்றச் சொற்கள் எண்ணங்கள், குணங்கள், உணர்வுகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதால் அவற்றை "பண்புப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

Compound Nouns - இணைவுப் பெயர்சொற்கள்

Blackboard, Homeland, without, wallpaper, brother-in-law போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை இணைத்து இன்னுமொரு தனிச்சொல்லாக அல்லது தனிப்பெயராக பயன்படுபவற்றை இணைவுப்பெயர்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றது.

ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இப் பெயர்சொற்களின் அட்டவணைகள் எதிர்வரும் பாடங்களில் ஒவ்வொன்றாகத் தரப்படும். அப்போது அதனதன் மேலதிக விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இன்று பொதுவான பெயர்சொற்கள் மற்றும் உரித்தானப் பெயர்சொற்கள் அட்டவணைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏனையவை விரைவில் வழங்கப்படும்.

நன்றி

அன்புடன் அருண்.
பதிப்புரிமை © 2007-2009 ஆங்கிலம்.ப்ளொக்.கொம்
எமது ஆங்கிலம் வலைத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், கருத்துக்களங்கள், மன்றங்கள் போன்றவற்றில் மீள்பதிவிடுவதாயின் தயவு செய்து எமது வலைத்தளத்தின் பெயரை aangilam.blogspot.com கட்டாயம் குறிப்பிட்டே மீள்பதிவிட வேண்டும். அவ்வாறு மீள்பதிவிடுவோர் எமது மின்னஞ்சல் முகவரியூடாகவோ arunhk.info AT gmail.com அல்லது குறிப்பிட்ட பாடத்தின் பின்னூட்டமாகவோ அறியத் தர வேண்டும்.
இப்பாடங்கள் பலருக்கும் பயன்பட வேண்டும் எனும் நன்நோக்குடன் நீங்கள் மீள்பதிவிடுபவராக இருக்கலாம் அவ்வாறாயின், பாடங்களின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். தயவு செய்து முழுப் பாடங்களையும் அப்படியே வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும். நன்றி.